தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2022 தோல்விக்கு பழிதீர்க்குமா அல்லது இங்கிலாந்து வெற்றி தொடருமா... அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா! - T20 WORLD CUP 2024

T20 WORLD CUP 2024: டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணி வீரர்கள்
இந்தியா இங்கிலாந்து அணி வீரர்கள் (Credits - AP Photos)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 12:16 PM IST

சென்னை: டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு சமபலம் வாய்ந்த அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதல் தோல்வி அடையாமல் ஆதிக்கம் செலுத்தி இந்தியா அணி அரையிறுதி வரை தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா அணிக்கு பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. சூப்பர் 8இல் ஆஸ்திரேலியா பவுலர்களை பந்தாடிய ரோகித் சர்மா இன்றும் இங்கிலாந்து பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. 6 போட்டிகளில் வெறும் 66 ரனக்ள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலி இன்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளார்.

ரிஷப் பண்ட் (167), சூர்யகுமார் யாதவ் (149) ஆகியோர் தேவையான நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்து அணிக்கு கைகொடுக்கின்றனர். ஐபிஎல்லில் விமர்சனத்திற்குள்ளான ஹர்திக் பாண்டியா (116) தற்போது இந்திய அணிக்கு கீழ் வரிசையில் அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளிக்கிறார்.

பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா(11), அர்ஷ்தீப் சிங் (15) ஆகியோர் மிரட்டலான ஃபார்மில் உல்ளனர். மேலும் அர்ஷ்தீப் சிங் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இர்ண்டாவது இடம் பிடித்துள்ளார். இருவரும் இன்று சோபிக்கும் பட்சத்தில் இந்தியா ஃபைனலுக்கு எளிதாக முன்னேறலாம்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் ஜாஸ் பட்லர் (191), சால்ட்(183), ப்ரூக் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதே வேளையில் இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனக்ள் இந்த உலகக் கோப்பையில் சொல்லிக் கொள்ளும் அளவு ரன்கள் சேர்க்கவில்லை.

மேலும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிக ரன்களை வழங்கி வருகின்றனர். ஜோர்டான் 7 விக்கெட்கள், ஆர்ச்சர் 9 விக்கெட்கள், அதில் ரஷித் 9 விக்கெட்கள் என சராசரியாக ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை அளிக்கிறது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் கயானாவில் இன்று மழை பெய்ய 70 சதவிதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், போட்டி நடத்தப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போட்டி ரத்தாகும் பட்சத்தில் இந்தியா புள்ளிகளின் அடிப்படையில் ஃபைனலுக்கு முன்னேறும்.

ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா அணியை தோற்கடித்த இங்கிலாந்து அணி இறுதி போட்டி வரை சென்று கோப்பை வென்றது. அதற்கு இன்று இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடைசி சில ஆண்டுகளாக இந்தியா, ஐசிசி தொடர்களில் நாக்வுட் போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறும் நிலையில், இன்று இங்கிலாந்தை வென்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: 32 வருடத்தில் முதல் முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி.. சோக்கர்ஸ் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா! - T20 WORLD CUP 2024

ABOUT THE AUTHOR

...view details