பெனோனி:19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
குரூப் சுற்று மற்றும் சூப்பர் 6 சுற்று முடிவுகளை தொடர்ந்து நடப்பு சாம்பியனான இந்தியா, தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டி தென் ஆப்பிரிக்காவின் பெனோனி நகரின் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்டோல்க் 14 ரன்கள் எடுத்து இருந்த போது ராஜ் லிம்பானி வீசிய பந்தில் ஆரவெல்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய டேவிட் டீகர் டக் அவுட் ஆகி வெளியேற 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.
இதனையடுத்து பிரிட்டோரியஸ் உடன் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இதில் நிதனமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்னிலும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 50 ஓவர்களில் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும் முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா. ஓப்பணிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற மற்றொரு பேட்ஸ்மேனான அர்ஷின் குல்கர்னி 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய முஷீர் கான் 4 ரன், பிரியன்ஷு மோலியா 5 ரன்களுக்கு வெளியேற 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதனையடுத்து கேப்டன் உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் இருவரும் இணைந்து அணியில் ஸ்கோரை அதிராடியாக உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய சச்சின் தாஸ் 96 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அவினாஸ் 10 (18), ராஜ் லம்பானி 13 (4) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பு அளித்ததால், இந்தி அணி, 48.5 ஓவர்களில் 248/8 ரன்களை எடுத்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.