ஐதராபாத்:கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் 2019- 2021, மற்றும் 2021- 2023 ஆகிய இரண்டு சீசன்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று கடைசியில் தோல்வியை தழுவியது.
முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியிடமும், இரண்டாவது சீசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா கோப்பையை கோட்டைவிட்டது. இந்நிலையில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது.
அதேநேரம், நியூசிலாந்து அணியிடம் கண்ட அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் இந்திய அணி நிலை தடுமாறி உள்ளது. நியூசிலாந்திடம் அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகளை கண்டதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 62.82 சதவீதத்திற்கு இறங்கி உள்ளது.
அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணி தனது மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வரும் 1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஏற்கனவே தொடரை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்டத்திலும் இந்தியா தோல்வியை தழுவினால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைவதை சிக்கலாக்கும் எனக் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.