சென்னை:இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் இளம் வயதில் கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார்.
பாராட்டு விழா:இதையடுத்து குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் பாராட் டுவிழா நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த விழாவானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் சாம்பியன் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
ஹோம் ஆப் செஸ்:இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,"புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன் குகேஷ். தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் தன்னுடைய கனவை நனவாக்கி இருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார்.