அகமதபாத்:17-வது ஐ.பி.எள் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5வது போட்டியில் முன்னால் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ரித்திமான் சாஹா ஆகியேர் களமிறங்கினார்.
இதில் ரித்திமான் சாஹா 19 ரன்களும் கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இருப்பினும் மும்பை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு முன்னால் குஜராத் அணி பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை.
இதனையடுத்து களமிறங்கிய அஸ்மத்துல்லா 17 ரன்கள் எடுத்து வெளியேற 11.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் குவித்து இருந்தது குஜாரத் அணி. இதனையடுத்து குஜராத் அணியின் அதிரடி ஆட்டநாயகன் டேவிட் மில்லர் களமிறங்கி 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் பின்னர் கடைசி ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய ராகுல் திவாட்டியா 15 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த நமன் திர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்
இதன் பின்னர் ரோஹித்வுடன் ஜோடி சேர்ந்த டெவால்ட்டு பிரெவிஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இதில் ரோஹித் 43 ரன்னும், பிரெவிஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் மும்பை அணி சுலபமாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் அணியின் பவுலர்கள் ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்கோரை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை உமேஷ் யாதவ் வீச களத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய, முதல் பந்தை சிக்ஸருக்கு இரண்டாவது பந்தை பவுண்டரிக்கும் பறக்கவிட்டார் இதனால் ஆட்டம் பரபரப்பானது.
இதனையடுத்து 3 வது பந்தை எதிர்கொண்ட பாண்டியா சிக்ஸர் அடிக்க முயன்ற போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ். இதன் மூலம் குஜராத் கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளார் சுப்மன் கில். அதே போல் மும்பை கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இதையும் படிங்க:RR Vs LSG: வெற்றி வாகை சூடிய ராஜஸ்தான்! பூரான், ராகுல் அதிரடி ஆட்டம் வீண்! - RR Vs LSG