ஹைதராபாத்:ஐசிசியின் முன்னாள் எலைட் பேனல் நடுவர் டேரில் ஹாப்பர் மகேந்திர சிங் தோனி மீது குற்றச் சாட்டினை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஊடகத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த ஹாப்பர், "கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில், 16வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வீசினார். அவர் 16வது ஓவர் பந்து வீச வருவதற்கு முன்னால் களத்திற்கு வெளியே மட்டுமே 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க :Asian Championship Trophy; அரையிறுதியில் தென்கொரிய ஹாக்கி அணியை எதிர்கொள்கிறது இந்தியா! - Asian Championship Trophy 2024
ஒரு பந்துவீச்சாளர் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி எடுத்துக்கொண்டால் அவர் விதிமுறைகளின் படி பந்து வீச தகுதியற்றவர். விதிகளின் படி, மதீஷா பதிரானா பந்து வீச தகுதியற்றவர் ஆனார். ஆனால் அந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, நடுவர்களிடம் 4 நிமிடங்கள் வாக்குவாதம் செய்து நேரத்தைக் கடத்தியதால் மதீஷா பதிரானா களத்திற்குள் 4 நிமிடத்தைச் செலவிட்டதால் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். தோனியின் இந்த செயல் அப்போது பேசுபொருளானது.
கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு மரியாதை இல்லாமல் இருப்பது தான் எனக்கு பிரச்னை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், சிலர் சட்டத்தை விட பெரியவர்களாக இருக்கலாம். அவர்கள் வெற்றி பெறுவதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதே" என தெரிவித்தார்.