சென்னை:FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தநிகழ்சிய்யில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில்,"கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக ஆண்கள் சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி:24 அணிகள் இந்த தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளனர். 3*3 பார்மட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறோம். அதற்காக, பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. 3*3 மற்றும் 5*5 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கிராஸ் ரூட் அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 13 வயது முதல் இலவச கல்வி, பயிற்சி தங்குமிடத்துடன் சர்வதேச உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். 4 ஆண்டுகளுக்குள் 10 அகாடமிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
2025 ஆம் ஆண்டில் அதன் மாற்றங்களைக் காணலாம். கிரிக்கெட்டைப் போன்று கூடைப்பந்து வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் தேசிய அளவில் போட்டிகள் நடந்திருந்தாலும், கடந்த 13-14 வருடங்கள் முதல் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டத்தின் மையமாக உள்ளது. விளையாட்டில் அரசின் பங்களிப்பைவிடச் சங்கங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதற்கான கட்டமைப்புகள் இல்லை. பயிற்சி மையங்கள் சரியாக இல்லை. உள்கட்டமைப்பும் இல்லை. அதிகளவிலான பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளி, கல்லூரிகள் உடன் இணைந்து கூடைப்பந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்" என்றார்.