திண்டுக்கல்:டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 8வது சீசன் கடந்த 5 ஆம் தேதி சேலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தொடரின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்தநிலையில், லீக் சுற்றின் இறுதி போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
201 இலக்கு:இந்த தொடரின் 24வது லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதியது. நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்தனர். அந்த அணியினர் தொடக்கம் முதலே அடித்து விளையாடி விறுவிறுப்பாக ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இது நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
திண்டுக்கல் அணி தரப்பில் அதிகபட்சமாக, சிவம் சிங் 57 பந்துகளில் 106 ரன்கள்(10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள்) எடுத்தார். மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் குர்ஜப்நீத் சிங், முருகன் அஸ்வின் மற்றும் மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.