சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள், நேற்று (அக்.4) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இப்போட்டிகள் சென்னை உட்பட 4 நகரங்களில் அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், நேற்று இந்தப் போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என 5 இடங்களில் மாநில அளவிலான இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இதற்கான தொடக்க விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், சாம்பியன் பட்டம் வெல்லும் மாவட்டத்திற்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பையையும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “நான் துணை முதலமைச்சராக பதவி ஏற்று கையொப்பமிட்ட முதல் கோப்பு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கோப்பு. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் நடப்பாண்டு புதிய ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பொற்கால ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 11 லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க:அக்.6ல் மெரினாவில் விமான சாகசம்.. பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுகள் என்ன?
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த துளசிக்கு, முதலமைச்சர் ஊக்கத்தொகையாக ரூ.2 கோடி வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள பிரவீனுக்கு ஊக்கத்தொகையாக ரூ.27 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டிற்காக ரூ.82 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாடு அதிக அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறது.
விளையாட்டுத் துறையின் தலைநகரம் தமிழ்நாடு: செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, வீரர்களுக்கு இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இரவு நேரத்தில் பார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரிசு தொகை:இந்த ஆண்டு நடைபெறும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், 2ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 3ஆம் இடத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல், குழு பிரிவில் முதலிடத்திற்கு கோப்பையுடன் ரூ.75 ஆயிரம், 2ஆம் இடத்திற்கு ரூ. 50 ஆயிரம், 3ஆம் இடத்திற்கு 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்