தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு" துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்! - CARROM WORLD CHAMPION KASIMA

கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இதேபோல் மித்ரா, நாகஜோதி ஆகிய இருவருக்கும் தலா 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கேரம் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
கேரம் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி (Credits - Udhay X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை:ஆறாவதுஉலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் 17 வயதே ஆன கசிமா, மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் என்று சாதனை புரிந்தார். அதேபோல் மித்ரா 2 தங்கம், நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களை வென்றனர்.

இதனையடுத்து வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு அறிவித்த ரொக்கப் பரிசை போன்று காசிமா உள்ளிட்ட கேரம் சாம்பியன்களுக்கு பரிசு அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

இதனையடுத்து நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் காசிமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தநிலையில் கேரம் சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் 2 பதக்கங்களை வென்ற மித்ரா, நாகஜோதி ஆகிய இருவருக்கும் தலா 50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது," விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம் திராவிட_மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

இதையும் படிங்க:'இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்' - உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேட்டி

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களைக் குவித்து திரும்பினார். அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று நாடு திரும்பியபோதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம்.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம். எனவே முதலமைச்சரின் உத்தரவின்படி எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடி, வி.மித்ராவுக்கு ரூ.50 லட்சம், கே.நாகஜோதிக்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம். தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைக்க அனைத்து வகையிலும் திமுக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details