ஐதராபாத்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் விளையாட்டில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருப்பதாக கூறி விளையாட்டு அமைப்பாளர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தை அணுகினார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் (Yusneylis Guzman Lopez) உடன் தனக்கும் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டுமென மேல்முறையீடு செய்தார்.
வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டில் மூன்று முறை தீர்ப்பை ஒத்திவைத்த சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது. வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் தர முடியாது என சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், வினேஷ் போகத்திற்கு என்ன காரணத்திற்காக வெள்ளிப் பதக்கம் மறுக்கப்பட்டது என்பது குறித்து தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் போட்டிக்கான எடைத் தகுதியை உறுதி செய்வது அவசியம் என்றும், விதிமுறைகள் என்பது அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் பொதுவானது என்பதால் வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடை வரம்பிற்கு மேல் இருந்தார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அவரே அதற்கான ஆதாரங்களை தெளிவாகவும் நேரடியாகவும் விசாரணையின் போது தெரிவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.