சென்னை: 2024 ஐபிஎல் தொடரின் 7வது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை - குஜராத் அணிகள் மோதி வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்தரா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பவர் பிளேயின் கடைசி ஓவரில், ரச்சின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, ரஹானே 12 ரன்களிலும், ருத்துராஜ் 46 ரன்களிலும் வெளியேறினர்.
அதன்பின், சிவம் துபே - டரில் மிட்செல் கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 22 பந்துகளில் அரை சதத்தை அடித்த பின்னரே, சிவம் துபே களத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, களம் வந்த சமீர் ரிஸ்வி 14 ரன்களிலும், ஜடேஜா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.