சென்னை:தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சென்னை ’ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100’ ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாப்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது பிப்.4ஆம் தேதி முதல் பிப்.11ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் சர்வதேச டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஓபன் சேலஞ்சர் போட்டிகள் 1996, 2018, 2019, 2023 ஆகிய நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 5வது ஆண்டாக போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்த ‘ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100’ சர்வதேச போட்டியில், 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். தற்போது, இத்தாலியைச் சேர்ந்த 20 வயதான லுகா நாரிடி, இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக இருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் ’ஏடிபி சேலஞ்சர் 100’ தொடர்களில் சென்னையில் நடைபெறுவது முதல் போட்டியாகும். அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, டெல்லியில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். பிப்.4ஆம் தேதி தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். முதன்மைச் சுற்று பிப்ரவரி 5-ஆம் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஆட்டம் முடியும் வரை மின்னொளியில் நடைபெறும். பிப்ரவரி 10-ஆம் தேதி சனிக்கிழமை இரட்டையர் இறுதிப் போட்டியும், பிப்ரவரி 11 அன்றான ஞாயிற்றுக்கிழமை ஒற்றையர் இறுதிப் போட்டியும் நடக்கிறது.