சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டிகள் இம்மாதம் 11 வரை நடைபெறவுள்ளது.
7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகேசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளனர்.
இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் -சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இப்போட்டியில் கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ், எம்.பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள்.
பரிசு:மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி இன்று மாலை தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் மாஸ்டர் பிரிவின் முதல் சுற்று போட்டிகளில், அரவிந்த் சிதம்பரம் - எம்.அமின் ஆகியோரும், மாக்ஸூட்லு பர்கான் - லாக்ரேவ் மேக்ஸ்சிம், விதித் குஜராத்தி - அர்ஜுன் எரிகேசி, மற்றும் ஆரோனின் லெவோன் - சரனா அலக்ஸ்சி ஆகியோர் விளையாடினார்.