ஐதராபாத்: துலிப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய பி அணியில் அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் இடம் பிடித்து உள்ளார். முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டங்களுக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங் உள்ளது.
இதில் கலந்து கொள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இதனால் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அதன் காரணமாக அப்டேட் அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
ரின்கு சிங் சேர்ப்பு:
இந்திய பி அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் அழைக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் இடம் பிடிக்க நட்சத்திர வீரர் ரின்கு சிங் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இருப்பினும், அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கபடவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரின்கு சிங் இடம் பிடித்த போதிலும் மெயின் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் துலிப் கோப்பைக்கான இந்தியா பி அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். மேலும் துலிப் கோப்பை விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
யார் யார் விடுவிப்பு:
அதேபோல் இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில், கே.எல் ராகுல், துருவ் ஜுரல், குல்திப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோரையும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக துலிப் கோப்பையில் இருந்து பிசிசிஐ விடுவிடுத்துள்ளது. மேலும் சுப்மன் கில்லுக்கு மாற்றாக ரயில்வே அணியில் விளையாடி வரும் பிரதம் சிங்கும், கே.எல் ராகுல் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு மாற்றாக அக்ஷய் வத்கர் மற்றும் எஸ்கே ரஷீத் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.