ஐதராபாத்: 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சையத் முஸ்தாக் அலி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வரை வீசிக் கொள்ளலாம் என்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இம்பேக்ட் பிளேயர் விதிகளை மாற்றவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சையது முஸ்தாக் அலி டிராபியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்பேக்ட் பிளேயர் என்றால் என்ன?:
அதேநேரம் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு பல்வேறு அணிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாஸ் போட்ட பின்னர் ஒவ்வொரு அணியும் தங்களது ஆடும் லெவன் பட்டியலை வெளியிட்ட பின்னர் கூடுதலாக 5 வீரர்களை பட்டியலிட இந்த இம்பேக்ட் பிளேயர் விதி வழிவகை செய்கிறது.
இதனால் ஆட்டத்தின் போது ஒரு அணி இம்பேக்ட் பிளேயரை மாற்று வீரராக ஆடுகளத்தில் களமிறக்க முடியும். இந்த விதிமுறையால் ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கான முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதாக பலரும் குற்றஞ்சாட்டிய நிலையில், இன்னும் சர்ச்சை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தொடர்கிறது.
இரண்டு பவுன்சர்:
அதேநேரம் கடந்த ஆண்டு சையது முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீச அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து மட்டுமே வீச அனுமதிக்கப்படுகிறது.
இதனால் இம்பேக்ட் பிளேயர் மற்றும் இரண்டு பவுன்சர் விதிகளை மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் இரண்டு பவுன்சர் மற்றும் இம்பேக்ட் பிளேயர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்களிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் முதல் தர கிரிக்கெட் போட்டிக்கான விதிமுறை பட்டியலை பிசிசிஐ வெளியிட்ட போதிலும் அதில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புற்றுநோய் சிகிச்சை குழந்தைகளுடன் சூர்யகுமார், ஸ்ரேயாஸ் சந்திப்பு! சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த குழந்தைகள்! - Surya kumar Yadav Shreyas Iyer