சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி சிடி மணி என்பவரை தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றதாக காக்கா தோப்பு பாலாஜியை, தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளி வந்த அவர் தலைமறைவாகி உள்ளார்.
இதனால், பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான காக்கா தோப்பு பாலாஜி, சென்னை வியாசர்பாடி பி.டி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை பி.டி குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்து, பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் பாலாஜி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும், இந்த தாக்குதலில் காவலர்கள் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காவல் ஆய்வாளர் சரவணன், தற்காப்புக்காக ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், இடது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். இதனை அடுத்து, பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிணவறைக்கு வந்த பாலாஜியின் தாயார் கண்மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளாக என் மகன் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், காவல்துறையினர் வேண்டுமென்றே என் மகனை சுட்டுக் கொன்று விட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டர்.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சம்போ செந்திலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர், அவரது மனைவியை கூட காவல்துறையினர் விசாரிக்காமல் உள்ளனர்.
மேலும், எனது மகன் பாலாஜியின் நண்பர்கள் ஆறு பேரை, சம்போ செந்தில் திட்டமிட்டு கொலை செய்துவிட்டான். எனது மகனை அவனால் கொள்ள முடியாத காரணத்தினால், காவல்துறையினரின் துணையோடு தற்போது எனது மகனை சுட்டுக் கொன்று விட்டான்.
கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல், அறக்கட்டளை தொடங்கி இயலாதவர்களுக்கு உதவி செய்வது, பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்த எனது மகன் பாலாஜியை, உள்நோக்கம் மற்றும் சதியின் காரணமாக காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இதுமட்டும் அல்லாது, வேலூரில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக தினமும் நீதிமன்றம் சென்று கையொப்பமிட்டு வந்த எனது மகனை, என்கவுண்டர் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில் திட்டமிட்டு சதி செய்து சுட்டுக் கொன்று விட்டனர்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.