ஐதராபாத்:ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரரான மேத்யூ வேட் தனது 36 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார்.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அவர் ஆர்வமாக இருந்த நிலையில் அவருக்கு அப்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தனக்கு இனி ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார். அதேநேரம் அவர் ஓய்வை அறிவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உடனடியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஓய்வை அறிவித்த வீரருக்கு அடுத்த நிமிடமே பயிற்சியாளர் பதவி கிடைத்திருப்பது கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக மேத்யூ வேட் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஓய்வு முடிவு பற்றி மேத்யூ வேட் வெளியிட்ட வீடியோவில், "நான் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன். ஒவ்வொரு தொடரின் போதும், ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் இதைப் பற்றி நான் விவாதித்துக் கொண்டே இருந்தேன். கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக இது தொடர்ந்தது.
தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களாக பேசிக் கொண்டு இருக்கிறேன். கடந்த உலகக் கோப்பையில் எனக்கு இடம் அளிக்கப்படாத நிலையில் நாங்கள் அது பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினோம். நான் எனது கேரியரில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை பற்றி புரிந்து கொண்டேன்.
ஒருவேளை கடந்த உலகக் கோப்பையில் நான் விளையாடி, ரன் குவித்து, ஆஸ்திரேலியா உலக கோப்பை வென்று இருந்தால் நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டி20 அணியில் மேத்யூ வேட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜோஸ் இங்லிஸ் செயல்பட்டு வருகிறார். மேத்யூ வேட்டின் ஓய்வு அறிவிப்பால் அந்த இடத்தை ஜோஸ் இங்லிஸ் இனி நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பலோன் டி ஓர் விருது என்றால் என்ன? கால்பந்தின் பைபிள் எனக் கூற காரணம் என்ன? விருது வாங்கியவருக்கு என்ன கிடைக்கும்?