அகமதாபாத்:17வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் (ஞாயிற்றுக்கிழமை) இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளன.
இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திலும், குஜராத் அணி 7வது இடத்திலும் உள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி, மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதனால் 2 புள்ளிகளை இழந்தது மட்டும் அல்லாமல் மைனஸ் (-1.4525) ரன்ரேட்டில் உள்ளது. இதனை சரி செய்ய வரவிருக்கும் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் மார்ச்.23 ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. அதற்கு அடுத்து மார்ச்.27ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிராடியாக விளையாடி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.