தமிழ்நாடு

tamil nadu

தைப்பூச தீர்த்தவாரி திருவிழா; நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பரின் திருவிளையாடல் அரங்கேற்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:48 PM IST

Nellaiappar temple: "திருநெல்வேலி" எனப் பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி, தைப்பூச தீா்த்தவாாி திருவிழாவின் ஒரு நிகழ்வாக நெல்லையப்பர் கோயிலில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா

தைப்பூச தீர்த்தவாரி திருவிழா

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

அந்த வகையில், 4ஆம் நாள் திருவிழாவான நேற்று, சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதாவது, முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் என்பவர், சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான், அவருக்கு வழங்கிய செல்வங்களை சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்ததாக புராணம் கூறுகிறது.

இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டதாகவும், இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்ததாகவும், ஒரு நாள் அவர் நெய் வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு, குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் திறப்பு - எந்தெந்த மாநிலங்ளில் விடுமுறை? முழு தகவல் இங்கே!

அப்போது மேகம் கருத்து மழை பெய்ததால், இறைவனுக்கு நெய் வேத்தியத்திற்காக காயப் போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி, நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய படியே கோயிலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப் போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்படி பாதுகாக்கப்பட்டிருப்பதை வேதபட்டர் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்து வியந்த வேதபட்டர், நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனிடம் தெரிவிக்க, மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்துள்ளதாகவும், இறைவன் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால், வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் நெல்வேலி என்றும், திரு அடைமொழியுடன் திருநெல்வேலி என பெயர் பெற்றதாக வரலாறு உண்டு.

சிவனின் இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் நேற்று, நண்பகலில் சுவாமி சன்னதியில் உள்ள மண்டபத்தின் அருகே நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும், வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி‌ இன்று ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details