தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

களைகட்டிய தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா - அலைமோதிய மக்கள் கூட்டம் - THEN PENNAI RIVER FESTIVAL

தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், ஏராளமான மக்கள் வருகைப்புரிந்து திருவிழாவை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா
தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 10:50 PM IST

விழுப்புரம்:பொங்கல் பண்டிகையையின் நிறைவு விழாவான ஆற்றுத் திருவிழா இன்று தென் பெண்ணையாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இங்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவாக 5-ஆம் நாளன்று ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த நாளில், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரணமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதில், தென் பெண்ணையாற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நிலையில், தை மாதத்தின் 5-ஆம் நாளான இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தீர்த்தவாரி நடைபெற்ற சுவாமிகள் (ETV Bharat Tamil Nadu)

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர், விக்கிரவாண்டி, சின்னக் கள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பிடாகம், பில்லூர், அகரம் சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், உள்ளிட்ட 24 இடங்களில் ஆற்றுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி:

இதில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து, விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மேள, தாளங்கள் முழங்க தென் பெண்ணை ஆற்றுப் படுகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு ஆற்று நீரில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்து, சுவாமிகளுக்கு செய்யப்பட்ட தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர்.

இதையும் படிங்க:சோழவரத்தில் களைகட்டிய மஞ்சுவிரட்டு விழா.. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

தொடர்ந்து, ஆற்று நீரில் குளித்து கொண்டாடியுள்ளனர். மேலும், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் விற்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கியும், அப்பகுதியில் அமைக்கப்படிருந்த ராட்சத ஊஞ்சல், ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டும் உற்சாகத்துடன் ஆற்று திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.

தென் பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

இதில், குறிப்பாக பிடாகம், பேரங்கியூர் ஆகிய இடங்களில் உள்ள தென் பெண்ணையாறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அப்பகுதிகளில் ஆற்றில் அதிகளவில் நீர் செல்வதால் மக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெற்று வரும் 24 இடங்களிலும், 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details