தூத்துக்குடி:முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் கடற்கரைக்கு பக்தர்கள் இறங்கும் படிக்கட்டுகளை தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தின் வழியாக பக்தர்கள் இறங்கி நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 4) மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல் ஒன்று கரை ஒதுங்கியது.
மேலும், அலையின் வேகத்தால் அந்த கல் புரண்டுள்ளது. அப்போது அந்த கல்லில் எழுத்துக்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக கோயில் பணியாளர்கள் அந்த கல்வெட்டின் மீது திருநீறு தேய்த்து எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தனர். அந்த எழுத்துக்கள் தற்போதைய கால எழுத்துக்களாக இருந்தது. மேலும் அந்த கல்வெட்டில், "முனி தீர்த்தம் என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்தது".
அதற்கு கீழ், "இதன் பலன் ஆன்மாக்களை கட்டியிருக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரும்புச் சங்கிலியை தேய்ப்பதற்கு அரத்தை போலிருந்து பலனைக் கொடுக்கும்," என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.