மதுரை: 'தென் திருப்பதி' என்று புகழப்படுவதுடன், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திருமாலிருஞ்சோலை விளங்குகிறது. மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலின் 'சித்திரை திருவிழா' கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், சுந்தராஜபெருமாள் 'கள்ளழகர்' (Kallazhagar) வேடம் பூண்டு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக, தங்கப்பல்லக்கில் அழகர் மலையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.
பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கண்ணனேந்தல் வழியாக மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, தங்கப்பல்லக்கில் இன்று (திங்கட்கிழமை) காலை எழுந்தருளிய கள்ளழகரை, பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த எதிர்சேவையின் போது, கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க, கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி, கருப்பசாமி மற்றும் அனுமன் வேடமிட்ட பக்தர்கள் ஆடல், பாடல்களுடன், கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில், தோல் பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா..கோவிந்தா' என பக்தி கோஷங்களுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு வரவேற்றனர். அப்போது பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி பக்தியுடன் கள்ளழகரை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மூன்றுமாவடியில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் மாலை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருள்கிறார். அழகர்கோயில் புறப்பாடு முதல் மீண்டும் கோயிலுக்கு திரும்புவது வரை, சுமார் 480 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.