தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

அயோத்திக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையேயான உறவு..! காஞ்சி சங்கர மடம் கூறுவதென்ன?

Ayodhi and Kanchipuram: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டியுள்ள ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22-ல் கோலாகலமாக நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கும் உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கும் இடையே உள்ள தொடர்பை இங்கு காணலாம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:33 PM IST

Updated : Jan 20, 2024, 2:33 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை:நாடே உற்றுநோக்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியர் விஜயேந்த்ர சரஸ்வதி சுவாமி உள்ளிட்டோர் முக்கிய இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக, காஞ்சி காமகோடி பீடம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், 'இந்த நாட்டில் கூறப்பட்டுள்ள சப்த மோக்ஷபுரிகளில் முதலாவதான அயோத்திக்கும், தெற்கே உள்ள ஒரே மோக்ஷபுரியாம் காஞ்சிக்கும் பன்னெடுங்காலமாக பல யுகங்களாக சரித்திரத் தொடர்பு என்பது இருந்து வருகின்றது.

பல யுகங்களாக அயோத்திக்கும், காஞ்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது. சரித்திரத் தொடர்பாக ரகுவம்ச சக்கரவர்த்தியான தசரத மகாராஜாவிற்கு குழந்தைப்பேறு ஏற்பட வேண்டிக் கொண்ட நிலையில், அவரது கனவில் அவர்களின் குலதெய்வமான அயோத்தியாவில் இருக்கும் ஸ்ரீதேவி காளி அம்பாள் தோன்றி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீகாமாட்சி அம்மனை (Sri Kanchi Kamakshi Amman) தரிசித்து புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படியும், நிச்சயம் சத்சந்தான ப்ராப்தம் ஏற்படும் எனவும் ஆசீர்வதிக்க, அவ்வாறே காஞ்சியில் யாகத்தைச் செய்து, அதனால் ப்ரீதியடைந்த காமாட்சி தேவி அசரீரி வாக்காக, "என்னுடைய அம்சங்களுடன் கூடிய 4 மகன்கள் பிறப்பார்கள்" என ஆசீர்வத்தார். அவ்வாறே அயோத்தியில் கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரைக்கு ராம, பரத, லக்ஷ்மண மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.

அதுமட்டுமல்லாமல், பஞ்சபூதங்களின் தொடர்பாக, சைவத்தில் எவ்வாறு காஞ்சிபுரம் ப்ரிதிவிசேஷத்ரமாகக் கருதப்படுகிறதோ, அதேபோல் சாக்தத்தில் (தேவி உபாசனையில்) அயோத்தியானது ப்ரிதிவிஷேத்ரமாக அறியதான விஷயத்தை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

தர்மத்தின் உருவமே 'ராமர்': "ராமோ விக்ரஹவான் தர்ம"என ராமசந்திரமூர்த்தியானவர் தர்மத்தின் உருவமாக திகழ்பவர் எனக் கூறப்படுகின்றது. தர்மத்தின் வடிவமானவருக்கு அவருடைய அவதாரத் தலமான அயோத்தியில், ஓர் கோயில் அமைய பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீகாஞ்சி ஆச்சார்யர்கள் மூவரின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளும் பல்வேறு பேச்சுவார்த்தைகைளை நடத்தி, சமரசமாக தீர்வு கண்டு, ஸ்ரீராமபிரானுக்கு கோயில் எழுப்புவதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அவற்றின் ஓர் அங்கமாக 1986ஆம் வருடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், பிரயாக்ராஜ் (உத்திரப்பிரதேசம் மாநிலம்) முகாமிட்டிருந்தார், அப்பொழுது, அயோத்தியில் ராமர் கோயில் (Ayodhya Ram temple) நடை திறக்கப்படுகிறது என்று அறிந்து அங்கே நேரில் சென்று விசேஷ பூஜைகள் செய்தார்கள்.

அதுசமயம் விஷயமறிந்து, காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீமகா சுவாமிகள் அவர்கள் ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு வெண்குடையும், இரண்டு சாமரமும் ஸ்ரீமடம் சிப்பந்திகள் இருவர் மூலமாக விமானத்தில் அனுப்பிவைத்தார். அவைகளை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு, 1989ஆம் வருடம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்காக 'ஸ்ரீராம்' என்று பொறிக்கப்பட்ட செங்கற்களை ஸ்ரீகாஞ்சி ஆச்சாரியர்கள் அசீர்வதித்து விஷ்வ இந்து பரிஷத்தினரிடம் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீஅஷோக் சிங்கால், முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் என் பலர் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், சமரச முயற்சிக்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை ஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள் மேற்கொண்டார்கள்.

அனைவரும் கூடி அமர்ந்து பேசினால் மட்டுமே இதற்கு ஓர் சுமூகமான தீர்வு காணமுடியும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். இரு சாராருக்கும் ஹிதமாகவும், அதே சமயத்தில் செய்யவேண்டியதை உறுதியாகவும் எடுத்துரைத்தார்கள். பாரதம் முழுவதும் எந்தவொரு அசாதாரணமான சூழல் ஏற்படாதிருக்கக் காரணம் ஸ்ரீ ஆச்சார்யர்களின் அணுகுமுறையே என அனைத்து தரப்பினரும் திண்ணமாக கூறினர்.

ஸ்ரீ சரணர்கள் கூற்றுபடியே சுமூகமாக அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அயோத்தியில் 2020ஆம் வருடம், ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி, ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு பூமிபூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது. அது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி தினமாக அமைந்தது. ஸ்ரீராமர் கோயில் அமைய அவர் எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகரித்தார்போல் இருந்தது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாபதி: அவ்வமயம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்கள் பூமி பூஜைக்கு முக்கியமானதான சங்குஸ்தாபனம் செய்வதற்கு கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்குவையும் (அடிப்பாகம் சதுரமாகவும், மத்தியில் அறுகோணமாகவும், மேலே தாமரை மொட்டு போல கூர்மையாக முடிவது போல் செய்து), காஞ்சியிலிருந்து 2 செங்கல்களும், ஐந்து தங்கக்காசும் (ஜயா, பத்ரா, நந்தா, ரிக்தா & பூர்ணா), பூமி பூஜை மற்றும் சகலருக்கும் நன்மை கொருகின்ற விவரங்கள் அடங்கிய தாமரைப் பட்டயமும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

அதனை சண்டியாகத்தில் வைத்து பூஜித்து, பிறகு அந்த சங்குவை, காஞ்சியில் உள்ள ஸ்ரீசங்குபாணி விநாயகர் கோயிலில் வைத்து பூஜித்து (ஸ்ரீஆதிசங்கரர் காஞ்சி நகரை புணர்நிர்மானம் செய்வதற்கு முன்னர் இந்த சங்குபாணி விநாயகரை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது), பிறகு ஸ்ரீமகா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரின் பிருந்தாவனத்தில் வைத்து பிறகு அவை அனைத்தையும் அயோத்திக்கு அனுப்பிவைத்தார். ராம ஜென்மபூமி அறக்கட்டளையினர் ஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள் அனுப்பிவைத்த வைதீகப் பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்கள் குறிப்பறிந்து செய்த அனுக்ரகத்தை நினைத்து பெருமிதப்பட்டனர்.

2023ஆம் வருடம் காசியில் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை (சாதுர்மாஸ்ய காலம் என்பது இந்து மத புராணங்களின் படி, கார்த்திகை (அக்டோபர் - நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிவடையும் இந்நான்கு மாத காலமாகும் எனக் கூறப்படுகிறது. இவ்விரத காலத்தில் கீரை, தயிர், பால் உள்ளிட்டவையும் சேர்த்து எந்த அசைவமும் உண்ணக்கூடாது.

இந்நாட்களில் மசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்டவைகளே உண்டு புலனின்ப மகிழ்ச்சியை கைவிட வேண்டும்.) முடித்துக்கொண்டு, ஸ்ரீசங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள், மேற்சொன்னார்போல் சாக்தத்தில் (சாக்தம் - உபநிடதங்கள் என்ற வேதாந்த தத்துவங்கள்) ப்ரிதிவி ஷேத்ரமான (ஷேத்ரம் அல்லது ஷேத்திரம் என்பது கோயில் எனப் பொருள்) அயோத்தியில் சாரதா நவராத்திரியை அனுஷ்டித்தார்கள். விஜயதசமிக்கு அடுத்தநாளான ஏகாதசியன்று ஸ்ரீராம் லால்லா சன்னதிக்கு எழுந்தருளி விசேஷ பூஜைகள் செய்தார்கள். அதன்பிறகு, அங்கு நடந்துகொண்டிருக்கும் அலய நிர்மாணப்பணிகளை மேற்பார்வையிட்டார்கள். அங்கு குழுமியிருந்த பணியாளர்கள் அனைவருக்கும் பிரசாதம் அளித்தார்கள். சரயு நதியில் புனித நீராடி தானங்கள் அளித்து, மாலை தீப உத்ஸவமும் நடத்தினார்கள்.

ஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கியப்பங்கு வகித்துள்ளார். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் கூறியபடியே பிராண பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கவும் யாகசாலை ஆகிய வைதீக கார்யக்ரமங்களுக்கு காசியைச்சேர்ந்த ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் (இவரே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாள் குறித்த தமிழர் ஆவார்) என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ ஆச்சார்யாள் கூறியதன் பேரில் காசி ஸ்ரீலஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித்(86) தலைமை வகிக்கிறார். இவ்வாறு காமகோடி திரிவேணியாக மூன்று ஆச்சார்யர்களும் ஸ்ரீராமபிரானுக்கு கோயில் அமைக்கவும், அமைக்கப்படவிருக்கும் கோயிலுக்கு சாஸ்திர ரீதியாக அனைத்தையும் ஏற்பாடு செய்துகொடுப்பதையும் தங்களுடைய சேவையாக செய்தனர்.

சாக்ஷாத் மகா விஷ்ணுவின் அவதாரமாக, சப்த மோக்ஷபுரிகளில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தவரான, ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு ஜனவரி, 22ஆம் தேதி திங்கட்கிழமையன்று, பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள், 2020 அயோத்தியில் பூமி பூஜையையொட்டி, ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கான கோயில் கட்டுமானப்பணி எந்தவொரு விக்னமும் இல்லாமல் நடைபெற பக்தர்கள் அனைவருக்கும் "ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்" எனும் த்ரயோதசாக்ஷரி ராம மந்திரத்தை பாராயணம் செய்ய சொல்லி ஆக்ஞாபித்ததை சிரமேற்கொண்டு கும்பாபிஷேகத்தன்று அனைவரும் பாராயணம் செய்து அனைவருக்கும் ஸ்ரீராம பிரசாதம் கிடைக்க வேண்டிக்கொள்வோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அயோத்தியில் இடம் பிடிக்கும் மாமல்லபுரம்! அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்கும் மாமல்லபுரத்தின் மரக்கதவுகள்!

Last Updated : Jan 20, 2024, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details