ஐதராபாத்: ஏழுமலையானுக்கு நேரடி நிவேதனத்திற்காக நெய் ஒரு கிலோ ரூ.1,667க்கு வாங்கப்பட்ட நிலையில், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்க வாங்கப்படும் நெய் கிலோ ஒன்று ரூ.320-க்கு மட்டுமே வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட கலப்படங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருமலை தேவஸ்தான நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவரான ஒய்.வி.சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.
அவரது பேட்டியில் ஏழுமலையான் கோயிலுக்கான நிவேதனப் பொருட்கள் வாங்குவதில் கடும் சிரத்தையுடன் செயல்படுவதாகக் கூறியிருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஃபதேபூரில் இயங்கி வரும் நாட்டு மாட்டு பண்ணையிலிருந்து நாள்தோறும் 60 கிலோ நெய் நன்கொடையாளர்கள் உதவியுடன் வாங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக நெய் ஒரு கிலோவுக்கு ரூ.1,667 செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க:"திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் கலப்படம்" - திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புதல்!
அதே நேரத்தில் பக்தர்களுக்கான பிரசாத லட்டு தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான லிட்டர் நெய் ரூ.320 விலையில் வாங்கப்பட்டுள்ளது. இரண்டுமே கலப்படம் இல்லாத நெய் எனில் குறைந்த விலையில் எப்படி வாங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துப்படி ஒரு கிலோ நெய் தயாரிக்க 17 முதல் 18 லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை 40 ரூபாய் என வைத்துக் கொண்டாலுமே, ஒரு கிலோ நெய்யின் அடக்க விலை சுமார் ரூ.720 வரை வருகிறது. எருமை மாட்டு நெய்யின் விலை கிலோவுக்கு ரூ.800 வரை சந்தையில் விற்கப்படுகிறது.