ஐதராபாத் : அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6 புள்ளி 5 சதவீதமாக சரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி வகிதம் 7 புள்ளி 3 என்ற அளவை எட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அடையாளத்தை தக்கவைக்க உதவும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நடப்பாண்டில் பதிவு செய்யக்கூடிய விரைவான வளர்ச்சியைக் குறைக்கும் பல காரணிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நீடித்த மூலதன செலவு, ஆரோக்கியமான பெருநிறுவன செயல்திறன், தனியார் மூலதன செலவினங்கள் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள் ஆகியவை இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தக்கவைக்க உதவுகின்றன.
இருப்பினும், பலவீனமான ஏற்றுமதி மற்றும் மொத்த விலைக் குறியீடு போன்ற பிற காரணிகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மிதமான பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரநிர்ணய மற்றும் ஆராய்ச்சுஇ நிறுவனமான பிட்ச் குரூப் ரேட்டிங் ஏஜென்சி வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையின் படி, இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 2025ஆம் ஆண்டு மார்ச் 31 முடிவடையும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவான 7 புள்ளி 3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு இடர்கள் இருந்த போதிலும், அரசாங்கத்தின் செலவீனங்கள், ஆரோக்கியமான கார்ப்பரேட் செயல்திறன், ஒதுக்கப்பட்ட கார்ப்பரேட் மற்றும் வங்கித் துறை இருப்பு நிலைகள், உலகளாவிய பொருட்களின் விலையில் நிலவும் மாற்றம் மற்றும் புதிய தனியார் நிறுவனத்திற்கான வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி கண்ட போதிலும் இந்திய பொருளாதாரம் மீட்சி பாதையில் உள்ளது என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் ஈடிவி பாரத்திற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த பொருளாதார தேவைகள் பெரும்பாலும் அரசின் மூலதன செலவினங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் இந்திய ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோல் நாட்டில் தற்போதைய நுகர்வுத் தேவை என்பது இன்னும் 50 சதவீத வருமான வரம்பிற்கு உட்பட்ட குடும்பங்களால் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, கடந்த 2023 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் நுகர்வோர் பிரிவு வெறும் 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ந்து உள்ளது. இந்தியாவின் உயர் பொருளாதார வளர்ச்சி என்பது, அதிகரித்த அரசு மூலதன செலவினங்களின் விளைவுகளால் ஏற்படும் நிலையில், அது பெரும்பாலும் தொழில்துறை பிரிவுகளான மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களில் காணப்படுகிறது.