ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில், நாளை (பிப்.4) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பார்வையிட்டார்.
இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “திமுக உடனான கூட்டணி குறித்து வரும் வதந்திகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. கூட்டணி குறித்து திமுகவுடன் பேசிய பிறகு, எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் சினிமா நடிகர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசியலில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள்.
நடிகர் விஜய் கட்சி கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் எதை முன்வைத்துச் செல்லப் போகிறார் என்று சொல்லவில்லை. அரசியல் என்பது சினிமா மாதிரி இருக்காது. அரசியல் தொடங்குவது சுலபம். ஆனால், அதை தொடர்ந்து நடத்துவதுதான் மிகவும் சிரமம் என்பதை அனுபவசாலி என்ற முறையில் கூறுகிறேன். சீமான், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்ற நடிகர்கள் போன்று நடிகர் விஜயும் கட்சி ஆரம்பிப்பது சுலபம். ஆனால், தொடர்ந்து நடத்துவது என்பது கடினம் என்பதை விஜய் உணர்ந்து இருப்பார்.