டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், ஆம் ஆத்மி கட்சியை சிறிய கட்சியாக மாற்றி, தேசிய தலைநகரின் சட்டப்பேரவை வரைபடத்தில் காங்கிரசுக்கு மீண்டும் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்த விடாமல் தடுத்துள்ளது. காங்கிரஸ் தங்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனாலும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, ஆம் ஆத்மியின் வாக்கு பலத்தைக் குறைத்தது. இதுவே ஆண்ட கட்சி தோல்வியைத் தழுவ முக்கியக் காரணமாயிற்று.
முன்னாள் முதலமைச்சரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த சந்தீப் திக்ஷித், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கெஜ்ரிவாலின் இரு பலம் பொருந்திய கைகளாகக் கருதப்படும் மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான பிரிவினை அரசியலின் காரணமாக தோல்வியைத் தழுவினர். மேலும், தேர்தல் பரப்புரையின் இறுதியில் காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிக்கைகள், சில தொகுதிகளில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெல்ல வழிவகுத்தன.
ஒருவரின் வெற்றியை மற்றொருவர் பறித்தாலும், டெல்லி தேர்தல் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்ததற்கு வேறு சில காரணங்களும் உண்டு. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அபரிமிதமான வளர்ச்சியை டெல்லியில் பார்க்கலாம் என்ற பாஜகவின் அறைக்கூவல் மக்கள் காதுகளில் வலுவாக ஒலித்திருக்கிறது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நேர்மறையான தேர்தல் பரப்புரை வியூகங்களும் பா.ஜ.க வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது. பல தொகுதிகளின் வாக்காளர்கள், காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தாங்கள் யாரை ஆதரிப்பது என்பது குறித்து குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பமான மனநிலையை பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தான் ஒரே தேர்வு என்ற சூழலை உருவாக்கியது.
மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முழக்கங்கள், அதிரடி சலுகைகள் நிறைந்த தேர்தல் அறிக்கைகள் என கவர்ச்சி காட்டிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான இசுலாமியர்களும், தங்களுக்கு விருப்பமானத் தொகுதிகளை தவிர, மற்றவைகளில் பா.ஜ.க-வுக்கு வாக்கு செலுத்த தயங்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
பா.ஜ.க-வை வெற்றியாளராக மாற்றியதற்கான சிறந்த உதாரணமாக முஸ்தஃபாபாத் தொகுதி முடிவுகள் உள்ளது. இந்த தொகுதியில் 50 முதல் 55 விழுக்காடு வரை இசுலாமிய மக்கள் உள்ளனர். இங்கு அசாதுதீன் ஓவைசியின் AIMIM (ALL INDIA MAJLIS-E-ITTEHADUL. MUSLIMEEN) கட்சி வேட்பாளர் மொஹத் தாஹிர் ஹுசைன், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதீல் அகமது கானுக்கு பெரிய இடையூறாகக் களம் கண்டார். தாஹிர் 33,474 வாக்குகளைப் பெற்றார்; அதீல் அகமது 67,638 வாக்குகளைப் பெற்றிருந்தார். இப்படி இசுலாமிய மக்களின் வாக்குகள் பிரியவே, மீதமுள்ள வாக்குகளை கவர்ந்த பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைக் கைப்பற்றினார்.
டெல்லி சட்டப்பேரவையின் பல தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் இடையேயான வாக்குகள் வித்தியாசம் சொற்பமாகவே இருந்தன. இதன் அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி வெற்றியை காங்கிரஸ் பறித்திருந்தது. இவை அனைத்தும் பா.ஜ.க-விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
திமார்பூர் தொகுதியில், பா.ஜ.க 1,657 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதேநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 6,101 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதே ஆம் ஆத்மியின் வெற்றியைப் பறித்ததற்கு சிறந்த உதாரணம்.
இதேபோல மெஹ்ரௌலி தொகுதியில், பாஜக வேட்பாளர் கஜேந்தர் சிங் யாதவ் 35,893 வாக்குகளைப் பெற்று, 35,467 வாக்குகள் பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேந்தர் சௌதரியை 426 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பா சிங் 6,762 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தொகுதியான சங்கம் விஹாரில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகியவை நல்ல எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றன. ஆனால் பாஜக வேட்பாளர் சந்தன் குமார் சௌதரியிடம் 344 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை பறிகொடுத்தது ஆம் ஆத்மி கட்சி.
திரிலோக்புரி தொகுதியில், பாஜக வேட்பாளர் ரவி காந்த் 392 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 57,825 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 6,147 வாக்குகளையும் பெற்றிருந்தனர். சங்கம் விஹாரில், பாஜக 344 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.