ஐதராபாத்: 2024 ஆம் ஆண்டில் இரண்டு முதலமைச்சர்கள் பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நீண்ட விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யபட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கலால் கொள்கை தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த இரண்டு முதலமைச்சர்களையும் பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறுவது தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. இதில் இரண்டு முதலமைச்சர்களும் இடைக்கால ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக இடைக்கால ஜாமீன் கோரி இரண்டு முதலமைச்சர்களும் தாக்கல் செய்த மனுக்களை முறையே டெல்லி மற்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றங்கள் நிராகரித்தன.
இரண்டு முதலமைச்சர்களும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இருவரும் பண மோசடி மற்றும் அந்நிய செலாவணி சட்டத்தை மீறியது தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரது இடைக்கால ஜாமீன் மனுக்கள் முறையே அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் நிராகரிக்கபட்டன.
இப்படி இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்த போதிலும், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று விடுதலையாகி உள்ளார். ஆனால் ஹேம்ந்த் சோரனின் சிறை வாசமும், சட்டப் போராட்டமும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் விடுதலையின் ரகசியம் என்ன?
கடந்த மே 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மறுதளித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது அனைத்திற்கும் காரணம் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே.
மக்களவை தேர்தலை மனதில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது குறிப்பில், "நடப்பாண்டின் மிகப் பெரிய நிகழ்வான மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஜாமீன் வழங்கும் போது ஒரு நபருடன் தொடர்புடைய இயல்பான தன்மைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது, அதை புறக்கணிப்பது என்பது அநீதியான செயல் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதற்காக, அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமை ஒப்பிட்டு பார்க்கக் கூடியது அல்ல என்றும் தெரிவித்தது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் எந்தவித குற்றப் பின்னணியில் தொடர்புடையவர் அல்ல என்பதாலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் கூட அவர் தொடர் விசாரணை என்பது உறுதிச் செய்யப்படாமல் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.
மேலும், ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் இதன் இடைப்பட்ட காலத்தில் அவர் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்லக் கூடாது என்றும் முதலமைச்சருக்கான எந்த அதிகார்ப்பூர்வ கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.