சுற்றுலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கல்வி சுற்றுலா, பக்தி சுற்றுலா, இன்பச் சுற்றுலா போன்ற பல வகை உண்டு. அதில் ஒன்று தான் பாரம்பரிய சுற்றுலா. நம்மை சுற்றி இருக்கும் பாரம்பரியமிக்க இடங்களை சென்று பார்ப்பதே இந்த பாரம்பரிய சுற்றுலா. ஆண்டுதோறும் நவ.19 முதல் நவ.25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. அப்படி நாம் இருக்கும் இந்த தமிழகத்திலே நம்மை சுற்றி பல பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ளது. அவற்றை பற்றியும் அந்த இடங்களின் பாரம்பரியத்தை இதில் காண்போம்.
ஐராவடேஸ்வரா கோயில்(Airavatesvara temple):இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், 'சிற்பிகளின் கனவு' என போற்றப்படுகிறது. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கு வரை, விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழங்கை என அனைத்து அளவிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறபங்களை கொண்டுள்ளது.
அழகும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோயில், யுனெஸ்கோவால் 2004ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவம் தெரியும் வகையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் உலக பிரசித்திப்பெற்றது.
உலக புகழ்பெற்ற ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசை படிகளும் இங்கு தான் உள்ளது. எங்கு நோக்கினும் அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் புதைத்து வைத்துள்ள இந்த கோயிலை காணக் கண் கோடி வேண்டும் என்றால் மிகையில்லை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் இருக்கிறது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.
நீலகிரி மலை ரயில் (The Nilgiri Mountain Railway): மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் இடையே உள்ள வளைவு நெளிவான பாதையில் செய்யும் இந்த இரயில் சவாரி த்ரிலிங் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். இந்த ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டியில் முடிகிறது. ஆங்கிலேயர்களால், 1908ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இரயில்தான் இந்தியாவில் தற்போது இயங்கும் ஒரே ரேக் ரயில்.
இயற்கையின் ரம்மிய காட்சிகளை தடதட எனும் ரயிலின் தாலாட்டில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை ஒரு முறையாவது பெற்று விடுங்கள். 2005ல், நீலகிரி மலை இரயில் பாதையை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்த ரயில், பொம்மை ரயில் (Toy Train) என அழைக்கப்படுகிறது.
கங்கை கொண்ட சோழப்புரம் (Gangaikonda cholapuram):முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று, வடக்கே உள்ள அரசர்களை வென்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டியுள்ளார். இது அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. இதனுடன், பிரமாண்டமான ஒரு சிவன் கோயிலையும் சோழன் கட்டியுள்ளார்.