கால் வலி, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம், இரத்த போக்கு, வாந்தி போன்ற என்னற்ற பிரச்சனைகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இதில், மாதவிடாய் கறையும் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் துணிகளில் இரத்த கறை படிவதை தடுக்க இயலாத ஒன்று. இந்த கறைகளை அகற்றுவது சற்று கடினமாக இருந்தாலும், சில குறிப்புகள் மூலம் எளிமையாக அகற்றலாம்.
குளிர்ந்த நீர்:உள்ளாடை போன்ற எடை குறைந்த ஆடைகளில் இரத்த கறை பட்டால், அதனை நீக்க குளிர்ந்த நீர் சிறப்பாக செயல்படுகிறது. கறை படிந்த பகுதியை தண்ணீரில் நன்கு அலசி வெயிலில் உலர்த்தினால் கறை நீங்கிவிடும். இரத்த கறை படிந்த உடனே இந்த முறையை செய்தால் எளிதில் நீங்கும். இதுவே, கறை வறண்டு போனால் சிறிது நேரம் எடுக்கலாம்.
பேக்கிங் சோடா: மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டேபிள் ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றவும். இப்போது, இந்த பேஸ்டை கறை படிந்த இடத்தில் தடவி ப்ரஸ் மூலம் மெதுவாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து விடுங்கள்.பின்னர், துணியை குளிர்ந்த நீரில் அலசி வெயிலில் உலரவைத்தால் கறை நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறு: துணியில் உள்ள கறைகளை அகற்ற எலுமிச்சை நன்கு உதவும் என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், கறை படிந்த இடத்தில் எலுமிச்சை சாற்றை தேய்த்து இயற்றையாக உலர விடவும். அடர்த்தியான அல்லது டார்க் நிற ஆடைகளில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தும் போது நிறத்தை இழக்க வாய்ப்புள்ளதால், வெளிர் வண்ண ஆடைகளில் இந்த முறையை பயன்படுத்துங்கள்.