'கண்ணுக்கு மை அழகு' என்பதை போல, கண்களுக்கு மட்டுமல்லாமல், முகத்திற்கே அழகு சேர்ப்பது புருவங்கள் என்றால் மிகையாகாது. புருவங்கள் நேர்த்தியாக சரியான அளவுடன், கருகருவென அடர்த்தியாக இருக்க வேண்டும் என நினைக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா?. ஆனால், இங்கு பலருக்கும் புருவம் மெல்லியதாகவும், பூனை முடியை போல இருக்கிறது. இதற்காக, பல முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லையா? கவலைய விடுங்க..இயற்கையான வழிகள் மூலம் அடர்த்தியான புருவத்தை பெற சில எளிய வழிகள் இதோ!
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஏ, ஈ மற்றும் இதர சத்துக்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொடுத்து புருவங்களில் முடி வளர உதவியாக இருக்கிறது. இரவு, தூங்குவதற்கு முன் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய்யை புருவங்களில் தடவி மசாஜ் செய்து வர 15 நாட்களில் நல்ல பலனை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இரவில் படுக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெயைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து தூங்குவது நல்ல பலனை தரும்.
கோப்புப்படம் (Credit - Pexels) விளக்கெண்ணெய்: தினமும் சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை தூங்கச் செல்லும் முன் புருவங்களில் தடவி மசாஜ் செய்து தூங்க செல்லவும். இப்படி தினசரி செய்து வர 1 மாதத்தில் புருவங்கள் அடர்த்தியாக வளரும்.
பாதாம் எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே, பாதாம் எண்ணெயைக் கொண்டு சிறிது நேரம் தொடர்ந்து மசாஜ் செய்யவும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் புருவங்கள் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
ரோஸ்மேரி ஆயில்:ரோஸ்மேரி எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் புருவத்தில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதற்கு ரோஸ்மேரி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சிறிது கலந்து புருவங்களில் தடவவும்.
- இது தவிர, வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் பேஸ்ட் செய்து, புருவத்தில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி, வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை செய்வதால் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம்.
- வெங்கயத்தில் உள்ள சல்பர், இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை வெங்காயச் சாற்றை புருவங்களில் தடவி வந்தால், முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் பாலை எடுத்து அதில் காட்டன் உருண்டையை நனைத்து புருவங்களை சுற்றி தடவவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சில நாட்களில் புருவங்கள் தடிமனாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
- இந்த குறிப்புகளுடன், தினமும் போதுமான தண்ணீர் குடிக்கவும். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவது மட்டுமின்றி, ரத்த ஓட்டத்துக்கும் உதவுகிறது. சிறந்த இரத்த ஓட்டம், முடி வளர்ச்சிக்கு நன்கு ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க:கருகருவென அடர்த்தியான புருவம் வேண்டுமா? உங்கள் கிட்சனில் இருக்கும் இந்த பொருளை பயன்படுத்துங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.