நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒருவரால் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை எட்ட முடியாமல் போகிறது. அதே நேரத்தில், சரியான படிப்பு இல்லாத ஒருவரால், நிச்சயம் இல்லாத பணியில் இருக்கும் ஒருவரால் பொருளாதார வசதிகளோடு வாழ முடிகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? பணத்தை கையாளுவதும், சேமிப்பும் தான். இது அவர்களுடைய குழந்தை பருவத்திலேயே தொடங்கியிருக்கும். குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்பது எந்த அளவிற்கு அடிப்படையான கடமையோ, அதே அளவிற்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பதும் பெற்றோர்களின் அடிப்படையான கடமையாகும். அந்த வகையில், சிறு வயதில் இருந்து குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை பற்றி எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
8 வயதிலே தொடங்குங்கள்: குழந்தைகளுக்கு 8 வயதாகும் போது இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால், அந்த வயதில் பணத்தை பற்றி அறிமுகப்படுத்த வேண்டும். பணம் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அதே போல, பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பது மிகவும் அவசியம். அதனால், கடையில் பணம் கொடுக்கும் போது, பள்ளியில் கட்டணம் செலுத்தும் போது போன்ற சூழலில் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு பணத்தை பற்றிய அடிப்படையை புரிய வைக்கிறது.
கோப்புப்படம் (Credits - Getty Images)
சேமிக்கும் பழக்கம்:உண்டியல் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்றுத்தரலாம். எதிர்காலத்திற்காக அல்லாமல், குறுகிய இலக்குகள் அதாவது, அவர்கள் விரும்பும் பொம்மை வாங்குவதற்காக சேமிப்பதன் மூலம் சேமிப்பு பழகத்தை கற்றுக்கொடுக்கலாம்.
சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்: பிள்ளைகளுக்கென்று சில பொறுப்பான பணிகளை வீட்டில் கொடுங்கள். அதை அவர்கள் செய்து முடித்தால் பாக்கெட் மணி கொடுங்கள். ஒவ்வொரு மாதமும் அவர்கள் சம்பாதித்த பணத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். இதை அவர்களிடம் காமிங்கள். இது, சரியான முறையில் செலவு செய்வது எப்படி என்று அவர்களுக்கு கற்றுகொடுக்கிறது.
பொருள் மற்றும் பணத்தின் புரிதல்: ஷாப்பிங் செல்லும்போது குழந்தையையும் அழைத்துச்சென்று தேவையான பொருளை வாங்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு அதன் விலையைத் அவர்களிடம் சொல்லுங்கள். அந்த பொருள் எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது அவசியம்.
கிப்டிங் ஐடியா: குழந்தையின் அம்மா மற்றும் அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அவர்களுக்கு பிடித்த சிறு பரிசை வாங்கிக் கொடுக்கச் செல்லி வாங்கிக்கொள்ளுங்கள். குழந்தை கொடுக்கும் கிப்டை உறவினர்கள், நண்பர்களிடன் 'என் குழந்தை சேமிப்பில் வாங்கியது' என்று பெருமையாக செல்லுங்கள். இது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு பணத்தை சேமிக்க கண்டிப்பாக ஊக்குவிக்கும்.
கோப்புப்படம் (Credits - Getty Images)
இது தவிர, குழந்தைகளுக்கு பணம் பற்றிய சில புரிதல்களை கற்று கொடுங்கள்...
அத்தியாவசியமான பொருள் எது? என்ற பகுத்தறிவை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். அதற்கு, பெற்றோர்கள் அந்தக் கொள்கையை வீட்டில் நடைமுறை படுத்த வேண்டும்.
தினசரி குழந்தை இரவு தூங்குவதற்கு முன் சிறு சேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ அல்லது அவர்களுக்கு புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதிய வையுங்கள.
குழந்தை நீண்ட நாட்களாக கேட்கும் விளையாட்டுப் பொருளைத் அவர்களது சேமிப்பிலிருந்து வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்கு பொறுமையும், காத்திருக்கும் குணமும் வளரும்.
பணத்தை சேமிப்பது மட்டுமல்லாமல், முதலீடு செய்வது பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதை பற்றி அவர்களுக்கு புரியவில்லை என்றால் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி விளக்குங்கள்.