தினமும் சாதம், குழம்பு, கூட்டு என சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்படியானால் ஒரு நாள் சற்று வித்தியாசமாக பிரியாணி சுவையில் இருக்கும் குஸ்காவை செய்து சாப்பிட்டு பாருங்கள். வீடே மணக்கும் குஸ்கா எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 1 கப் (20 நிமிடம் ஊறவைத்தது)
- நெய் - 1/2 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் -3
- பழுத்த தக்காளி - 2
- புதினா, கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
- தயிர் - 1/2 கப்
- ஏலக்காய் -4
- கிராம்பு - 4
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
- சீரகம், சோம்பு - 1 டீஸ்பூன்
- ஜாதிக்காய் - 1
- பிரியாணி இலை - 2
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
குஸ்கா செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் பழுத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
- இப்போது மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் தயிர் சேர்த்து கலந்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்
- அடுத்ததாக, ஒரு மணி நேரம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை வடிகட்டி சேர்த்து லேசாக கிளறி விடவும். பின்னர், 2 கப் தண்ணீர் சேர்த்து அதிகப்பட்சமாக இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் முற்றிலுமாக அடங்கிய பின் குக்கரை திறந்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் குஸ்கா ரெடி.
- ஒரு தட்டில் சுடச்சுட குஸ்காவுடன் சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் 65 அல்லது வெறும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மறக்காம ட்ரை பண்ணி பாருங்க..