கூந்தல் பராமரிப்பில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அரிப்பு போன்ற என்ன பிரச்சனைகள் வந்தாலும் அனைவரும் முதலில் உணவுமுறை, ஷாம்பு போன்றவை தான் மாற்ற நினைப்போம். ஆனால், இதற்கெல்லாம் சீப்பும் காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?. நீண்ட நாட்களுக்கு கழுவாமல் நாம் பயன்படுத்தும் சீப்பு, உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதித்து முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதன்படி, அழுக்கான சீப்புகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சீப்பை மாற்றுவது போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
அழுக்கு படிந்த சீப்பு: பல நாட்களாக, ஏன் பல மாதங்களாக சீப்பை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இப்படி அழுக்கு படிந்த சீப்பை பயன்படுத்துவது கூந்தலின் இயற்கையான பளபளப்பு தன்மையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும். முடியின் நுனிகளில் பிளவு (Split ends) ஏற்படுவதற்கு அழுக்கு சீப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.
தொடர்ந்து அழுக்கான சீப்பை பயன்படுத்துவது உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளையும் பொடுகு பிரச்சனையை அதிகரித்து ஒட்டுமொத்த சரும பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. சீப்பில் படியும் எண்ணெய், கூந்தல் மற்றும் சருமத்தை பாதித்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.
மற்றவர்களின் சீப்பை பயன்படுத்தலாமா?:
- பேன் உள்ளவர்களின் சீப்பை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கும் நிச்சயமாக பேன் பிரச்சனை ஏற்படும்
- பொடுகு அல்லது சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
- மற்றவர்களின் சீப்பை பயன்படுத்துவது மற்றும் நமது சீப்பை மற்றவர்கள் பயன்படுத்துவது சுகாதாரமானது இல்லை.