தெஹ்ரான்:ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (63),நேற்று (மே 19) காலை அஜர்பைஜானில் அமைந்துள்ள அரஸ் நதியில் தற்போது கட்டப்பட்டுள்ள அணையை, அந்நாட்டு அதிபர் இல்ஹம் அலியீவ் உடன் இணைந்து திறந்து வைப்பதற்காக, அஜர்பைஜான் சென்றுள்ளார்.
அணை திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மீண்டும் நாடு திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் இப்ராஹிம் ரைசி பயணம் செய்துள்ளார். அப்போது மோசமான வானிலை நிலவியதாகவும், அதன் காரணமாக ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர், ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஜோல்ஃபா பகுதியில் மலையின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைஅடுத்து, மீட்புப் படையினரின் மிகவும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையி்ன் விளைவாக ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் இன்று (மே 20) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், இந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அதிபரின் திடீர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் அதில் எழுந்த பல்வேறு சர்ச்சைகள் குறித்து காண்போம்.
யார் இந்த இப்ராஹிம் ரைசி: ஈரானின் அதிபராக இருந்துவந்த இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் உச்ச தலைவருக்கு அடுத்த அதிக அதிகாரம் படைத்த பதவி வகித்தவர். 63 வயதான ரைசி, அதிபர் ஆவதற்கு முன்பு நீதித் துறையில் வல்லுநராக திகழ்ந்ததால், நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் பதவியில் செயலாற்றியவர்.
ஈரானின் உச்ச தலைவரான 85 வயதுடைய அயதுல்லா அலி கமேனியை போல, அதிக செல்வாக்கு கொண்ட ஈரானின் அடுத்த உச்ச தலைவராக இப்ராஹிம் ரைசி உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஈரானில் 2021ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அயதுல்லா அலி கமேனியால் அனுமதிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் இப்ராகிம் ரைசியும் ஒருவராவார்.
அத்தேர்தலில், மொத்தம் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் சுமார் 62 சதவீதம் வாக்குகளைப் பெற்று இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் தான் ஈரான் நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே மிகக் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் ரைசிக்கு தடை: 1988 இல் ஈரான்-ஈராக் போரின் முடிவில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை தூக்கிலிடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இப்ராஹிம் ரைசி என்று அமெரிக்கா கருதுகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் இப்ராஹிம் ரைசிக்கு தடை விதித்துள்ளன.
இஸ்ரேல் மீது தாக்குதல்: சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள நாட்டின் தூதரக வளாகத்தில் ஈரானிய தளபதிகளைக் கொன்ற சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலை இப்ராஹிம் ரைசி ஆதரித்தார்.
மஹ்சா அமினியின் மரணம்:2022ஆம் ஆண்டு 22 வயதான ஈரானிய பெண்ணான மஹ்சா அமினியின் மரணம் மற்றும் அதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்புக்கள் உட்பட அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒடுக்க, நாட்டின் பாதுகாப்பு சேவைகளை இப்ராஹிம் ரைசி அதிகரித்தார்.
இதன் பிறகு, பல மாத கால பாதுகாப்பு அடக்குமுறையில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 22,000க்கும் மேற்பட்டோர் சிறையில் வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மஹ்சா அமினியின் மரணம் தொடர்பான விவகாரம் வழிவகுத்த வன்முறைக்கு ஈரான் தான் பொறுப்பு என்று ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு கண்டறிந்தது.
இதையும் படிங்க:கிர்கிஸ்தான் வன்முறை; பாக். மாணவர்கள் 4 பேர் கொலை.. இந்திய மாணவர்கள் வெளியே வராதீங்க - தூதரகம் அறிவிப்பு!