தைபே:தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு தைவானில் பெய்பின் தெரு, ஹுவாலியன் நகரம், ஹுவாலியன் கவுண்டி உள்ளிட்ட பகுதிகளில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தைவான் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து ஜப்பான் நாட்டின் இரண்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் இன்று (புதன்கிழமை) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், தைவான் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் உருக்குலைந்தன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்தில் ஹுவாலியன் கவுண்ட் பகுதியில் இதுவரை சுமார் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
காலை எட்டு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹுவாலியின் பகுதியில் இருந்த ஐந்து மாடி கட்டடத்தின் முதல் தளம் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில், அக்கட்டடம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதில், இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏராளமான பொதுமக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதோடு, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இப்பணியில் இணைந்துள்ளனர்.