சியோல்:தென் கொரியாவில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சுக் யோல் இன்று (ஜன.15) கைது செய்யப்பட்டார். அதிபர் வளாகத்தை நோக்கி சைரன்களுடன் வந்த எஸ்யூவி கார்கள் இன்று காலை அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தன. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரமாக அதிபர் அலுவலக அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடத்தி பின்னர் யூனை கைது செய்து கொண்டு சென்றனர்.
தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் யூன் சுக் யோல் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து யூன் தலைநகர் சியோலில் உள்ள இல்லத்தில் பல வாரங்களாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நீதிமன்றம் அதிபர் யூனுக்கு எதிராக கஸ்டடி வாரண்ட் பிறப்பித்தது.
அதன்படி யூன் இன்று கைது செய்யப்பட்டார். யூன் கைது செய்யப்படும்போது அவரது வழக்கறிஞர்கள், யூனை கைது செய்ய வேண்டாம், அவர் முறையான விசாரணைக்கு ஒத்துழைப்பார் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இருப்பினும், அதிகாரிகள் அவரை கைது செய்து கொண்டு சென்றனர்.
யூன் கைது செய்யப்படும் போது, ''இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக சரிந்துவிட்டது'' என புலம்பியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யூன் மீதான இந்த அதிரடி நடவடிக்கையில் ஊழல் எதிர்ப்பு துறை, காவல்துறை மற்றும் இராணுவம் என கூட்டாக ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க:இலங்கை அதிபர் சீனா பயணம்...கையெழுத்தாகப் போகும் முக்கிய ஒப்பந்தங்கள்...என்னென்ன தெரியுமா?
யூனின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், யூனை போலீஸ் கஸ்டடியில் எடுக்கும் முயற்சிகள் சட்டவிரோதமானது என்று கண்டித்து அதிபர் இல்லம் அருகே பேரணி நடத்தினர். அதேசமயம், நீதிமன்றத்தின் பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடையூறு செய்யும் அதிபரின் பாதுகாவலர்கள் கைது செய்யப்படலாம் எனவும் ஊழல் தடுப்பு ஏஜென்சியும், காவல்துறையும் வெளிப்படையாக எச்சரித்துள்ளனர்.
யூனின் வழக்கறிஞர்கள் கூறுகையில், நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் செல்லாது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், அதிபர் யூனைக் நீதிமன்ற காவலில் ஜனவரி 21 ஆம் தேதி வரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுப்பது குறிப்பிடத்தக்கது.