மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் 5வது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். உக்ரைன் மீதான போர், அதனால் உலக நாடுகளுடன் பகை, உள்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட பலவேறு இடையூறுகளுக்கு மத்தியில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தல் புதின் 87 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஷ்யா முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினை தொடர்ந்து அதிக ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நபர் என்ற சிறப்பை புதின் பெற்றுள்ளார். 2030ஆம் ஆண்டு அதிபர் புதினின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், அதன் பின்னரும் அவர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரம்ளினில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிபர் புதின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது தனது கைகளை வைத்து குழுமியிருந்த மக்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை கையாண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டன. அதிபர் புதின் மட்டுமின்றி அந்நாட்டின் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டன.