டெல்லி: அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு (Donald Trump) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க இந்த பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகும் அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு என் வாழ்த்துகள். இன்னொரு முறை நாம் இணைந்து இரு நாடுகளை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வோம். இந்த பதவிக்காலம் சிறப்பானதாக அமையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் வாயிலாக அவர் அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அப்போதைய துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் படுதோல்வி அடைந்தார்.
பதவியேற்பு விழா ஏற்பாடுகள்:
இதனையடுத்து அதிகார மாற்றத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அந்நாட்டின் அரசியல் அமைப்பின்படி ஜனவரி 20-ஆம் தேதி அதிபர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. வாஷிங்டன் டிசி-யில் உள்ள கேப்பிட்டல் எனப்படும் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தான் பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், இம்முறை அதிக குளிர் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் செய்யப்பட்டது.
அதிகாரப் பகிர்வுக்கு முன் டெனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியாவையும் நிர்வாக மாளிகைக்கு அழைத்து, முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். பின்னர், நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் அழைத்து செல்லப்பட்டார்.
பதவியேற்ற பின் சூளுரை:
அங்கு குழுமி இருந்த ஜோ பைடன் உள்பட முன்னாள் அதிபர்களுடன் டிரம்ப் கைகுலுக்கி நட்பு பாராட்டினார். இந்திய நேரப்படி நேற்றிரவு (ஜனவரி 20) 10:15-க்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில், அமெரிக்க அரசியல் சாசன விதிப்படி, முதலில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றார். இவருக்கான பதவி பிரமாணத்தை அந்நாட்டின் தலைமை நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்து வைத்தார்.
இதையும் படிங்க:ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி முடிவு
தொடர்ந்து, பீரங்கிகள் முழங்க டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் பேசிய அவர், "சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்றுவேன் எனவும், தென் எல்லையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவேன் என்றும், ஆண் மற்றும் பெண் என இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும்" எனவும் சூளுரைத்தார்.
இந்தியா சார்பில் பங்கேற்றது யார்?:
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் பெரு நிறுவன முதலாளிகள் என பலர் கலந்து கொண்டனர். முக்கியமாக, முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபுள்யூ புஷ், இந்திய வம்சாவளியான முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர்பிச்சை, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அலுவலர் டிம் குக் போன்ற தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்வுக்குப் பின், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விருந்தளித்தனர். இதில், இந்தியாவின் முதன்மை செல்வந்தர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.