காபூல் :ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் உள்ள மலை பிரதேச பகுதியில் நேற்று (ஜன. 20) இரவு இந்த விமான விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மலைப் பிரதேச பகுதியில் விபத்து நடந்த நிலையில், இன்று (ஜன. 21) காலை உள்ளூர் மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து விமான விபத்து நடந்தது தெரியவந்ததாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விமான விபத்து சீனா - தஜிகிஸ்தான் எல்லையோர பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்தது என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.