வாஷிங்டன்:இந்தியாவைச் சேர்ந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஆனந்த் ஹென்றி - ஏலிஸ் பிரியங்கா என்ற கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், இந்த நான்கு பேரையும் பிப்.12ஆம் தேதி இவர்களது உறவினர் சந்திப்பதற்காக சென்றபோது, சான் மேடியோ பகுதியில் உள்ள வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.
இது தொடர்பாக, போலீசாரின் 119 அவசர உதவி எண்ணுக்கு வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்ற போலீசார், இரண்டு ஆண் குழந்தைகளை படுக்கையறையிலும் மற்றும் அவர்களின் தாயாரை குளியலறையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டதாக சான் மேடியா பகுதி காவல்துறை அதிகாரி ஜெராமி சுராட் தெரிவித்துள்ளார். கணவன் - மனைவி இருவரது உடலிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. குளியலறைக்குள் 9 மி.மீ அளவுள்ள சிறிய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2016 டிசம்பர் மாதம், இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் குடும்பத் தகராறே இருந்தாலும், அனைவருக்கும் இது சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் என இது தொடர்பாக அவர் மேலும் கூறினார் .