வாஷிங்டன்:அமெரிக்காவை வழிநடத்த தகுதியில்லாத நபர் என்று கமலா ஹாரீஸை விமர்த்துள்ள முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் நாடு சந்தித்த பின்னடைவுகளுக்கு பின்னால் கமலா ஹாரீஸ் இருந்துள்ளார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கருதப்படும் கமலா ஹாரீஸ், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்துக்கு உட்பட்ட மில்வாக்கில் தமது தேர்தல் பிரச்சாரத்தை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) துவங்கினார்.
அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமலா ஹாரீஸ் உரையாற்றினார். அப்போது அவர், "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரச்சார நிதிக்காக எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என கோடீஸ்வரர்கள் மற்றும் பெருநிறுவனங்களை நம்பி உள்ளார். மேலும் அவரது கொள்கைகள் நடுத்தர மக்களின் நலன்களை சிதைப்பவையாகவே உள்ளன" என்று விமர்சித்திருந்தார்,
தன் மீதான இந்த விமர்சனத்துக்கு டொனால்ட் டரம்ப் இன்று பதிலடி கொடுத்துள்ளார். கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் ஆதரவு அளித்தற்கு பின், முதன்முறையாக ட்ரம்ப் இன்று வாஷிங்டனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றினார்.
அப்போது அவர், "தீவிர இடதுசாரி சிந்தனை கொண்ட கமலா ஹாரீஸ் இந்த நாட்டை வழிநடத்த தகுதியற்றவர்" என்று கடுமையாக சாடினார். மேலும், " கடந்த மூன்றரை ஆண்டுகளில், ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில் நாடு சந்தித்துள்ள பல்வேறு பின்னடைவுகளுக்கு பின்னாலும் கமலா ஹாரீஸ் இருந்துள்ளார். நாட்டை ஆளும் அதிகாரத்தை அவரிடம் அளித்தால் இந்த நாடு மேலும் சீரழியக்கூடும். எனவே, அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்காமல் பார்த்து கொள்வது நாட்டு மக்களின் அனைவரின் கடமையாகும்" என்று ட்ரம்ப் பேசினார்.
"கமலா ஹாரீஸுக்கு வாக்களிப்பது நாட்டை மேலும் நான்காண்டுகள் பலவீனப்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும். ஏனெனில் அவர் தொட்டதெல்லாம் துலங்காமல் தான் போயிள்ளது" எ்ன்று பேசிய டொனால்ட் ட்ரம்ப், தமது உரையில் கிட்டத்தட்ட 45 முறை கமலா ஹாரீஸ் பெயரை உச்சரித்தார்.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: முதல் பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரீஸ் பேசியது என்ன?