ஹைதராபாத்:மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த நில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், இலக்கியம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ(Nihon Hidankyo) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.