நியூயார்க்:ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான சுசீர் பாலாஜி மரணம் அடைந்துள்ளார். ஓப்பன்ஏஐ என்பது அமெரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது இளைஞரான சுசீர் பாலாஜி, செயற்கை நுண்ணறிவு பெருநிறுவனமான ஓப்பன்ஏஐயில் பணியாற்றியவர். சான்பிரான்சிஸ்கோவின் புக்கானன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ காவல்துறை அலுவலகம், தலைமை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை சுசீர் பாலாஜியின் மரணத்தை உறுதிசெய்துள்ளதாக மெர்குரி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து ஆய்வு செய்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதகங்கள் அதிகம் என வெளிப்படையாக கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வந்ததால் சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலராக அறியப்படுகிறார். இவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் காப்பிரைட் சட்டத்தை மீறியதாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாலாஜி பணியாற்றி வந்தார் . இவரது மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், சுசீர் பாலாஜி மரணம் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஓப்பன்ஏஐ மீது வெளிப்படையான குற்றச்சாட்டு: ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னெடுப்பு என்பது அமரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பணம் பண்ணும் வழியாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர் என்று பாலாஜி கூறியிருந்தார்.
இதையும் படிங்க:"குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் மீது கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் பிரபல எழுத்தாளர்கள், கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதுவோர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வழக்குத் தொடுத்துள்ளனர். ஓப்பன்ஏஐ நிறவனம் தங்களது காப்பிரைட் விதிகளுக்கு உட்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தளத்தின் பயிற்சிக்கு பயன்படுத்தியது. இதன் மூலம் அந்த நிறுவனம் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியதாக அதன் மதிப்பு உயர்ந்தது. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த பாலாஜியின் நேர்காணலில், "ஓப்பன்ஏஐ நிறுவனம் பல்வேறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பல்வேறு தொழிலதிபர்களின் தரவுகள் சாட்ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்டது,"என்று கூறியிருந்தார்.
ஏஐயால் தீங்கு விளையும்:ஏப்பன்ஏஐ நிறுவனத்தில் இருந்து பதவி விலகிய பாலாஜி, "இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இந்த சமூகத்துக்கு பெரும் பலன்களை அளிப்பதை விடவும், மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என நம்புகின்றேன். ஒட்டு மொத்தமாக இந்த இணையதள சூழல் முறையானது நீடித்திருக்கும் மாதிரி அல்ல,"என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குபெர்டினோ பகுதியில் பிறந்து வளர்ந்த பாலாஜி, பெர்க்லியில் உள்ள கலிபோ்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தார். இதற்கிடையே தமது மகன் மரணத்தால் மன வருத்தத்தில் உள்ளதால் தங்களது தனிப்பட்ட சூழலுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என பாலாஜியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.