புதுடெல்லி:ஆசியான்-இந்தியா, கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக லாவோஸ் நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி கிளம்பிச் சென்றார்.
லாவோஸ் கிளம்பும் முன்பு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிழக்கு நோக்கிய கொள்கையில் பத்தாவது ஆண்டை இந்தியா நிறைவு செய்திருக்கிறது. நான் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, ஒருங்கிணைந்த உத்திப்பூர்வ கூட்டாண்மையின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். மேலும் நமது எதிர்கால ஒத்துழைப்புக்கான வரைவையும் திட்டமிட உள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி,வலு மற்றும் அமைதிக்கான சவால்களில் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பிராந்தியத்தில் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு உள்ளிட்டவற்றுடன் இந்தியா நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகளைக் கொண்டுள்ளது. புத்த மதம், ராமாயணம் ஆகியவற்றில் பகிரப்பட்ட உயர்ந்த பாரம்பரியத்தை லாவோ கொண்டுள்ளது.
லாவோ அரசுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் தலைவர்களுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன். நமது கிழக்கை நோக்கிய கொள்கையில் பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ள வகையில் இந்த ஆண்டு சிறப்பான ஒன்றாகும். இந்த உறவு மூலம் நமது நாடு குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த பயணத்தின் போது பல்வேறு உலகத்தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து சந்திப்பும், விவாதங்களும் மேற்கொள்ளப்படும்," என்று கூறியுள்ளார்.
லாவோ மக்கள் ஜனநாயக குடியரிண் பிரதமர் சோனெக்சே சிஃபாண்டோன் அழைப்பின் பேரில் 21ஆவது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செல்கிறார்.