வாஷிங்டன்:அணுசக்தி நிறுவனங்களான இந்திய அரிய கனிமங்கள் லிமிடெட், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய 3 இந்திய நிறுவனங்களின் மீதான தடைகளை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், ஜோ பைடன் நிர்வாகம், தடுப்பு பட்டியலில் இருந்து வந்த இந்திய அணுசக்தி நிறுவனங்களை நீக்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் (BIS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, '' பனிப்போர் காலத்தில் விதிக்கப்பட்ட, இந்த மூன்று இந்திய நிறுவனங்களின் மீதான தடைகளை நீக்குவது, கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட அணுசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை குறைப்பதன் மூலம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை ஆதரிக்கும்'' என தெரிவித்துள்ளது.
அத்துடன், ''அமெரிக்காவும், இந்தியாவும் அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. இது கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், உலகெங்கிலும் உள்ள இரு நாடுகளுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் பயனளிக்கிறது'' என பிஐஎஸ் குறிப்பிட்டுள்ளது.