டாக்கா (வங்தேசம்):வங்கதேசத்தில் அவாமி லீக் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்த வங்கதேச தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் மற்றும் படித்த இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது என கருதி 30 சதவீதம் என்பதை 5 சதவீதமாக குறைக்க வலியறுத்தி தொடர்ச்சியான போராட்டத்தில் அந்நாட்டு மாணவர்கள் போராடி வருகின்றனர். இதிலிருந்து 'பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம்' என உருவாகி ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே மூண்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) இதற்கு நீதி கேட்டும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்குள்ளும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நேற்றைய தினம் தொடங்கிய போராட்டம் இன்று பிரதமர் அலுவகம் வரை சென்று நாடே வன்முறை களமாக மாறியது. இதற்கு மத்தியில் இன்று மதியம் உள்ளூர் நேரப்படி சுமார் 2.30 மணி அளவில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் தப்பியதாக தகவல் வெளியாகியது.
ஆளுங்கட்சிக்கு எதிராக போராடி வரும் மாணவர் இயக்கம், பிரதமர் ஹசீனா மற்றும் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வலியறுத்தி வரும் செவ்வாய்க்கிழமை அன்று பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த பேரணி திடீரென இன்று மாற்றப்பட்டது. அதன்படி, ஆயிரக்கணக்கானோர் பிரதமர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கபாபனிலிருக்கும் தனது இல்லத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ஹசீனாவோடு அவரது தங்கை ஷேக் ரெஹானா உடனிருந்ததாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இருந்தில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் இந்தியாவின் திரிபுராவுக்கு வந்தடைந்ததாகவும் பின்னர் அவர் லண்டனுக்கு தப்பி செல்லவிருப்பதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில், C-130 என்ற விமானம் AJAX1431 என்ற அழைப்புக் குறியுடன் இந்திய எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் காணப்பட்டதாகவும், அது டெல்லியை நோக்கி வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.