புதுடெல்லி: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவரையும் கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் இந்தியாவுக்கான லெபனான் தூதர் ராபி நர்ஷ், மகாத்மா காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராபி நர்ஷ் அளித்துள்ள நேர்காணலில்," மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு படுத்த விரும்புகின்றேன். நீங்கள் ஒரு புரட்சியாளரை கொன்று விடலாம்.ஆனால், நீங்கள் புரட்சியை அழிக்க முடியாது. நீங்கள் ஹிஸ்புல்லா தலைவர்களை கொல்லலாம்.ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிக்க முடியாது. களத்தில் பணியாற்றும் மக்களை கொண்டது இந்த இயக்கம்.பாரசூட் மூலமாக லெபனானுக்குள் வருகின்றனர் என்பது போல இது கற்பனைவாத கட்டமைப்பு அல்ல.
சர்வதேச சட்டங்களுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் இயக்கம் ஹிஸ்புல்லா. அதன் தலைவர்களை அழிப்பதால் மட்டும் அந்த இயக்கத்தை அழித்து விட முடியாது, லெபானான் நாட்டில் ஹிஸ்புல்லா அரசியல் இயக்கமாக செயல்படுகிறது. நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பிரதிநித்துவம் கொண்ட அரசியல் கட்சி. ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதப்படை உள்ளது.