வாஷிங்டன்:அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பு தங்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்காவிட்டால் அந்த அமைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் மார்-எ-லாகோ பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், "பிணைக்கைதிகள் வீடு திரும்பா விட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நான் அதிகாரப்பூர்வமாக அதிபராக பதவி ஏற்றுக்கொள்ளும் முன்பு அவர்கள் வீடு திரும்பாவிட்டால், மத்திய கிழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நீண்ட நாட்களுக்கு பிணைக்கைதிகளாக அவர்கள் வைத்திருக்க முடியாது. இஸ்ரேல் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்னிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர்.அமெரிக்காவை சேர்ந்த சிலரையும் அவர்கள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களின் தாய், தந்தையர் அழுகின்றனர். நான் அவர்களின் பிள்ளைகளின் உடலையா திருப்பி அனுப்ப முடியும். அவர்களின் மகள்களின் உடலையா நான் திருப்பி அனுப்ப முடியும். இது ஹமாஸ் அமைப்புக்கு நல்லதாக இருக்காது. வெளிப்படையாக சொல்கின்றேன். யார் ஒருவருக்கும் இது நல்லதாக இருக்காது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் மேற்கொண்டு ஏதும் சொல்லப்போவதில்லை.
இதையும் படிங்க:சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலை., விவகாரம்: கவன ஈர்ப்புத் தீர்மானம்!
பேச்சுவார்த்தையை நான் பாதிப்பு ஏற்படுத்த விரும்பவில்லை. நான் அலுவலகத்தில் பொறுப்பேற்கும் முன்பு இன்னும் இரண்டு வாரத்துக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். இல்லையெனில் மத்திய கிழக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,"என கூறியுள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதுவர் ஸ்டீவன் சார்லஸ் விட்காஃப் அந்த பிராந்தியத்தில் இருந்து இப்போதுதான் நாடு திரும்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் விட்காஃப், "பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எதனால் இன்னும் தாமதம் ஆகிகிறது என்பது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. எந்த வகையிலும் பாதகமான அம்சத்துக்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் அதிபரின் அந்தஸ்தைப் பொறுத்தவரை அவர் தாம் சொல்லியது நடக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றார். அந்த வரம்பை அவர் நிர்ணயித்திருக்கிறார். அந்த வரம்புதான் பேச்சுவார்த்தையை இயக்குகிறது.
இதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது குறித்து அதிகமாக வேறு ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதிபர் பதவி ஏற்க உள்ள நிலையில் அதிபரின் சார்பில் சில நல்ல விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன. நல்ல வழியில் நாங்கள் இணைந்து பணியாற்றுவதாக நான் கருதுகின்றேன். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்தும் நல்லமுறையில் நடைபெறும் என நம்புகின்றேன். சிலரது உயிர்களை நாம் காப்பற்ற முடியும்,"என்றார்.